இந்திய கிரிக்கெட்டின்‘அசுரன்’ சுனில் கவாஸ்கர் #HappyBirthdaySunilGavaskar

Updated: Sat, Jul 10 2021 15:31 IST
Image Source: Google

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அவரது வெற்றிக்கான ரகசியத்தை ஒருமுறை கூறினார். அது, நான் உள்ளே வரும் ஆக்ரோஷத்தைப் பார்த்தே எதிரில் நிற்பவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு நம் கண்களில் ஆக்ரோஷம் தெரிய வேண்டும் என்பதுதான் அந்த ரகசியம். அதுபோல் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த கவாஸ்கரின் கண்களும்.

ஆக்ரோஷத்தைப் பார்க்க வேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள் என்று கூறியிருப்பார்கள். அவர்களை ஒருமுறை கவாஸ்கரின் கண்களையும் பார்க்கச் சொல்லவேண்டும். 

உலகில் எந்த பந்துவீச்சாளர்களின் பெயர்களைச் சொன்னால் சர்வதேச பேட்ஸ்மேன்கள் தொடை நடுங்குவார்களோ அவர்களுக்கு எதிராக சுனில் காவஸ்கர் என்னும் இளைஞர் அறிமுகமானார்.

இந்தக் கால வெஸ்ட் இண்டீஸ் வீரர்களைப் போல் அல்லாமல், அந்த காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும், பவுன்சர்களுக்கும் பெயர்போனவர்கள். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட் என்னும் சொர்க்க உலகை அவர்கள் மட்டுமே ஆட்சி நடத்தி வந்தார்கள்.

ஆனால், அவர்களுக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டுவதற்கு இந்தியாவிலிருந்து அவர்களின் சொந்த மண்ணிலேயே கவாஸ்கர் களமிறக்கப்பட்டார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே 65 ரன்கள் எடுத்தார். சரியான டெக்னிக்குடன், பொறுமையாக ஆடினால் அவர்களை எளிதாக வீழ்த்தலாம் என கவாஸ்கர் முதல் ஆட்டத்திலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் பாடம் எடுத்துவிட்டார். அந்தத் தொடரில் மட்டும் உலகமே பயந்துகொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு அரைசதம், மூன்று சதம், ஒரு இரட்டை சதம் என 774 ரன்களை விளாசினார்.

 

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்தது, மற்ற நாட்டு பேட்ஸ்மேன்களுக்கும் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. கவாஸ்கரின் அசாதாரணமான ஆட்டத்தால் இந்திய அணி முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸிஸ் 1-0 எனத் தொடரை வென்றது. அந்தத் தொடரில் 774 ரன்களை 154 என்ற ஆவரேஜில் எடுத்தார், கவாஸ்கர்.

இதில் இன்னொரு முக்கியமான செய்கை என்னவென்றால், கவாஸ்கருக்கு வந்த வேகமான பவுன்சர்களை அந்தத் தொடர் முழுவதும் ஹெல்மெட் போடாமலேயே எதிர்கொண்டார் என்பது தான். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுன்சர் பாட்ஷா எல்லாம் கவாஸ்கரிடம் பலிக்காமல் போனது.

அங்கு தொடங்கிய கவாஸ்கரின் பயணம் கிரிக்கெட்டின் உச்சிக்குச் சென்றது. அதிரடியாக ஆட வேண்டும் என்றாலும் சரி, 60 ஓவர்களுக்கு 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும் சரி, கவாஸ்கரால் செய்ய முடியும். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி யாரும் படைத்திடாத சாதனையான டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 10 ஆயிரம் ரன்களை விளாசியதோடு, 34 சதங்களை விளாசியிருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் 'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சினே, கவாஸ்கரின் பேட்டிங்கைப் பார்த்து தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். கவாஸ்கர் ஆட்டமிழந்தால் ரேடியோவை ஆஃப் செய்துவிட்டு சென்றவர்கள் ஏராளம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறிய வார்த்தைகள் இவை: 'சுனில் கவாஸ்கர் ஆடிய ஆட்டத்தை சச்சின் இதுவரை ஆடவில்லை'.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு விதை போட்டவர்களில் கபில் தேவ்-ற்கு அடுத்தபடியாக கவாஸ்கருக்கும் பெரும் பங்கு உண்டு. 2கே கிட்ஸ்களுக்கு கோலி என்றால், 90ஸ் கிட்ஸ்களுக்கு சச்சின். அதுபோல் தான் 70, 80ஸ் கிட்ஸ்களுக்கு சுனில் கவாஸ்கர்.

தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் முன்னோடிய திகழ்ந்த சுனில் கவாஸ்கர் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிசிசிஐ, ஐசிசி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

TAGS

संबंधित क्रिकेट समाचार

सबसे ज्यादा पढ़ी गई खबरें